நான் நிலவைப் பார்க்க நாடி வந்த போதெல்லாம் 'இன்று அமாவாசை என்று உனக்குத் தெரியாதா?' என்று வானம் அனுதாபப்பட்டது.
நான் கோயில் வாசலை நெருங்கிய போதெல்லாம் அர்ச்சகர் நடை சாத்தி விட்டு அவசர அவசரமாக வெளியே கிளம்புவது தெரிந்தது.
என் மீது விழுந்த மாலைகள் கூட வாசம் துறந்த நாட்பட்ட மாலையான பின்பே என்னை வந்து சேர்ந்தன.
சொற்பொழிவுக்கு போன போதெல்லாம் கூட்டம் எழுந்து செல்லும் கடைசி நேரத்திலே தான் நான் பேச அழைக்கப்பட்டேன்.
பழக் கடைப் பக்கம் போனாலும் கூட வண்டு துளைத்த பழங்களுக்கே நான் வாடிக்கையாளனாக இருந்தேன்.
உயிரைக் கொடுத்து நான் உழைத்த போதெல்லாம்... எனக்குப் பக்கத்திலே உழைக்கும் நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவனுக்குக்கிடைத்த மரியாதையில் பாதி கூட எனக்குக் கிடைக்கவில்லை.
எனது புயல்கள் எல்லாம் எதிர் பாராத விதமாக ஒரு நாள் தென்றலாய் மாறின.
நான் கண் மலர்ந்து பார்த்த போது... எனது முட் படுக்கை.... மலர்ப் படுக்கையாகமனம் மாறியிருந்தது.
முதன் முதலாகஎனது கிழக்கில் சூரிய விளக்கைப் பார்த்து கண் கூசினேன்.
கோட்டான்கள் மட்டுமே அவலக் குரல் எழுப்பிய எனது நந்தவனத்தில் முதன் முதலாககுயில்களின் பாட்டு.
நான் உங்களைக் காதலிக்கிறேன்' என்று நீ சொன்ன வார்த்தைகளுக்கு....
இனியவளே ! - - - ------------ கடிகாரம் அணிவதை நான் நிறுத்தி விட்டதை அறிவாயா நீ?
என் காலத்தின் ஒவ்வொரு நொடியையும் என் காதல் தேவதையே...நீ நினைவூட்டுவதால்... என் மன அரங்கில் உனது வருகையின் பின்... கடிகாரம் என்பது தேவையற்ற பொருள்ஆனதடி!
'முட்கள்' மட்டுமே அடர்ந்திருந்த என் வாழ்க்கைக் காலத்தை... கடிகாரத்தின் 'முட்கள்'சுட்டிக் காட்டிய நேரங்கள் எனக்கு உணர்த்துகின்றனவோ என்று ஒரு காலத்தில் நான் எண்ணியதுண்டு!
ஆனால்...இன்றுஉனது 'சொற்கள்' காட்டும் நேரங்கள்... உன்னால் ஆசீர்வதிக்கப்பட்ட என் ராசியான நேரங்களை எனக்கு ஞாபகப்படுத்துதடி!!
கடிகாரத்தின் மணியோசையைக் கேட்கும் போதெல்லாம்... எனது வாழ்க்கையில் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருந்த அபாய மணியோசையையே அது எனக்கு ஞாபகப்படுத்தியது!
ஆனால்...உனது வருகைக்குப் பின்... உன் கொலுசு மணியோசை ஒன்றே எனக்கு கோயில் மணியோசையாகஒலிக்குதடி!